ரஜினி, விஜய், அஜித், கமல் படங்கள் மீது நம்பிக்கை; தமிழ் சினிமா இயல்பு நிலைக்கு திரும்புமா? திரைத்துறையினர் எதிர்பார்ப்பு

 


கண்ணுக்கே தெரியாத, சீனா நாட்டில் உருவான ஒரு வைரஸ் உலக மக்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. கொரோனா ஊரடங்கினால் சினிமா உலகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அதன் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். படத்திற்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலும் உள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகும் திரையரங்குகளில் படம் பார்க்க கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.


சந்தேகம்


கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தளர்வுகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இறுதியாக, திரையரங்கம் திறப்பதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. நாளை (ஆக.,23) முதல் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திரையரங்குகள் இயங்கும். பின்னர், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில், திரையரங்குகளுக்கு மக்கள் அச்சமின்றி வருவார்களா எனும் கேள்வி எழுகிறது. அதோடு, சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூட்டம் வருமா என்பதும் திரைத்துறையினரால் கணிக்க முடியவில்லை.


ரஜினி, அஜித்


கடந்த ஆண்டு சுமார் 9 மாதங்கள் திரையரங்குகள் மூடியே கிடந்தன. நவம்பர் மாதமே திரையரங்குகள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டாலும் பொங்கலுக்கு வெளியான விஜய்யின் மாஸ்டர் படமே திரையரங்குகளை இயல்பு நிலைக்கு திரும்ப வைத்தது. சுல்தான், கர்ணன் என ஓரளவுக்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்துகொண்டிருந்த சூழலில் மீண்டும் தொடங்கிய கொரோனாவின் 2வது அலையால் திரையரங்குகள் மூடப்பட்டன. 3 மாதங்கள் ஆகிவிட்டன. திரையரங்கு வெளியீட்டிற்காக இருந்த படங்கள் ஓடிடி வெளியீட்டுக்கு மாறி வருகின்றன. நாளை முதல் திரையரங்குகள் திறக்கும்போது அடுத்தடுத்த மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் ரஜினி, அஜித் படங்கள் அப்போது தான் வெளியாக இருக்கின்றன.


வலிமை


நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. விஜய்யின் மாஸ்டர் ரிலீசில் திரையரங்கில் எப்படியான வரவேற்பு கிடைத்ததோ, அப்படியான வரவேற்பு வலிமைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அண்ணாத்த


வலிமையைத் தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு இருக்கிறது. தமிழில் அதிக சம்பளம், அதிக வசூல் என இரண்டிலும் ரஜினி படங்களே முதலிடத்தில் இருக்கும். சிவா இயக்கத்தில் ரஜினி, நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி கிராமத்து கதையில் ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி கலந்த குடும்ப படத்தில் நடிப்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


விஜய்


விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் தயாராகும் என தெரிகிறது.


விக்ரம்


தமிழ் படம் இல்லையென்றாலும், தமிழ் படத்துக்கு இணையான வரவேற்பு 'ஆர் ஆர் ஆர்' படத்துக்கு நிலவுகிறது. பாகுபலி எனும் பிரம்மாண்டத்தைக் கொடுத்த ராஜமெளலியின் அடுத்தப் படைப்பு இது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். அலியா பட், அஜய்தேவ்கன் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாகுபலி மாதிரியான ஒரு பிரம்மாண்ட படமாக இது உருவாகிவருகிறது. இந்தியாவின் சென்சேஷனல் ஹீரோவாக இருக்கிறார் கன்னட நடிகரான யஷ். இவரின் கே.ஜி.எப் சேப்டர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எப் சேப்டர் 1 படமானது டிசம்பர் 2018-ல் வெளியானது.


கன்னடம், தெலுங்கு, மலையாளம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படமும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருட கடைசியில் வெளியாக இருக்கிறது. இப்படமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. மாஸ்டர் படத்தைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'விக்ரம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. இந்த வருடத்துக்குள் படத்தை முடித்து பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதே படக்குழுவின் திட்டம்.


ஓடிடி


மக்களுக்கு இப்போது பொழுதுபோக்காக இருப்பது செல்போனும், டிவி, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களும் தான். ஊரடங்கு காலத்தில் இதன் வளர்ச்சி 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளிவராமல் இருப்பதால் ஓடிடி தளங்கள் பல அதிரடி ஆபர்களை கொடுத்து மக்களை தங்களது தளங்களில் படம் பார்க்க தூண்டுகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்ற அச்சமும் திரையுலகினர் மத்தியில் உள்ளது. அதேசமயம் சில தயாரிப்பாளர்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ள படத்தை இதிலாவது விற்று போட்ட பணத்தை கொஞ்சமாவது எடுத்து விடலாம் என எண்ணுகின்றனர். எனவே ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில படங்களை ஓடிடிக்கு விற்று வருகிறார்கள். ஆனால் தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை இன்னும் அவர்கள் ஓடிடியை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.


வளர்ச்சி


ஓடிடியில் வெளியான படங்களில் சூரரை போற்று, சார்பட்டா பரம்பரை படங்களை தவிர வேறு எந்த தமிழ் படமுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் இந்திய ஓ.டி.டி., சந்தையின் மதிப்பு, 10 ஆண்டுகளில் 1.13 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு, 11 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், 2030ல், 93,750 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. சிறப்பான நெட்வொர்க் வசதி, டிஜிட்டல் இணைப்பு, ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்படும் என, ஆர்.பி.எஸ்.ஏ., அட்வைசர்ஸ் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓ.டி.டி., சந்தை, இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும். இந்த வளர்ச்சிக்கான அடுத்த அலை, இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை நகரங்களிலிருந்து வரும். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி; உள்ளூர் மற்றும் பிராந்திய ஓ.டி.டி., நிறுவனங்களும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன. 46.27 கோடி வரும் 2025ல் ஓ.டி.டி., தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 46.27 கோடியாக அதிகரிக்கும்.இந்திய நுகர்வோர், கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகமாக வீடியோ பார்க்கும் பழக்கத்துக்கு வந்துள்ளனர். அதிலும் குறைந்த கால அளவிலான வீடியோக்களை, ஸ்மார்ட்போனில் பார்ப்பது அதிகரித்து வருகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓடிடி என்பது வேகமாக வளர்ந்தாலும் தமிழ் சினிமாவிற்கு திரையரங்குகள் தான் அடிப்படை. அந்த வகையில் நாளை திரையரங்குகள் திறக்கப்பட்டு அடுத்தடுத்த மாதங்களில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா 3வது அலை அதற்கு இடம் கொடுக்க வேண்டும்.

Sakthi

ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்ஜெட்களை (Gadgets) ஆய்வு செய்வதிலும், சிக்கலான தொழில்நுட்பங்களை எளிய தமிழில் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர். ​தொடர்புக்கு: sakthi@techvoicetamil.com ஃபாலோ செய்ய: [LinkedIn Link] | [Twitter Link]

Post a Comment

Previous Post Next Post